ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி அரசாங்கம் கண்டிக்கவில்லை: ஜெயராம் ரமேஷ்!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை கேலி செய்வதாகும்.

ஈரானுடன் உடனடியாக ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் அவசியம் என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்திய அரசாங்கம் இதுவரை இருந்ததை விட அதிக தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் குண்டுவீச்சு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகள் ஆகியவை குறித்து மோடி அரசாங்கம் விமர்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும் அது கடுமையான மவுனத்தைக் கடைபிடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​கள் நேற்று அதி​காலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறி​வைத்து ஜிபி​யு-57 பங்​கர் ரக வெடிகுண்​டு​களை வீசின. ஒவ்​வொரு விமான​மும் தலா 2 குண்​டு​கள் என மொத்​தம் 14 குண்​டு​களை வீசின. இவை 90 மீட்​டர் ஆழத்​துக்கு பூமியை துளைத்துச் சென்​று, வெடித்துச் சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்​றி​லு​மாக சேதமடைந்​தது.

ஈரானின் நடான்​ஸ், இஸ்​ப​கான் நகரங்​களில் உள்ள அணுசக்தி தளங்​கள் மீதும் பி-2 போர் விமானங்​கள், ஜிபி​யு-57 பங்​கர் வெடிகுண்​டு​களை வீசின. அதே​நேரம், சுமார் 400 மைல் தூரத்தில் கடலுக்கு அடி​யில் முகாமிட்​டிருந்த அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து 30 டோமஹாக் ரக ஏவு​கணை​கள் சீறி பாய்ந்​தன. இந்த ஏவு​கணை​களும் நடான்​ஸ், இஸ்​ப​கான் அணுசக்தி தளங்​களை அடுத்​தடுத்து தாக்​கின. அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​களின்​ தாக்​குதல்​களால்​ ஈரானின்​ 3 அணுசக்​தி தளங்​களும்​ முற்​றி​லு​மாக அழிக்கப்பட்டுள்ளன.