‘தைலாபுரத்தில் நடைபெறுகிற கூட்டங்களுக்கு வருகை தராத நிர்வாகிகளுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பாமக மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் முரளிசங்கர், அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன், மாநிலச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை 46 ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறேன். வன்னியர் சங்கத்துக்கு தலைவராக பு.தா. அருள் மொழியும், கட்சிக்கு நிறுவனர் மற்றும் தலைவராக நானும் உள்ளோம். 34 துணை அமைப்புகளை உருவாக்கி, வழிகாட்டி வருகிறேன். 34 அமைப்புகளும் திறம்படச் செயல்படுவதற்காக நிர்வாகிகளை ஊக்குவித்து வருகிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக பெரிய வெற்றியைப் பெறும். தைலாபுரத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு வந்துள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் எதிர்கால சட்டப்பேரவை உறுப்பினர்கள். கட்சியில் அனைத்து அதிகாரமும் எனக்கு உள்ளது. அதனால்தான், கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
கூட்டணி குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை. கூட்டணி குறித்து பேசினால், கூட்டணி முடிவாகி விட்டதா என்று கேட்பார்கள். இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. நல்ல, வித்தியாசமான, வெற்றி பெறும் கூட்டணி அமையும். தற்போதுள்ள 5 பாமக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற ரகசியத்தை தற்போது சொல்லக்கூடாது. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா ஆகியோர் அவமதிக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். யாரையும் இழிவுபடுத்தக் கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
