உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்று கூறியிருக்கிறார். பலர் நாடாளுமன்றமே உயர்ந்தது என சொன்னாலும் தன்னை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்று அவர் பேசியிருக்கிறார்.
கடந்த மாதம் நாட்டின் 52வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி கவாய், தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அதன் கீழேயே செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தலைமை நீதிபதி பிஆர் கவாய் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாகக் குறிப்பிட்ட கவாய், அரசியலமைப்பைத் திருத்துவதற்கு தான் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.. ஆனால் நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார். மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது தான் அவர் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
மேலும், சிலர் நாடாளுமன்றம் தான் உயர்ந்தது என்று கூறுவார்கள்.. ஆனாலும் தன்னை பொறுத்தவரை அரசியலமைப்பு தான் முதன்மையானது என்றும் கூறினார். நிர்வாகம், சட்டமன்றம் அல்லது நீதித்துறை ஆகிய ஜனநாயக அமைப்புகளில் எந்த அமைப்பு உயர்ந்தது என்ற விவாதம் எப்போதுமே இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “நாடாளுமன்றம் தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும், என்னை பொறுத்தவரை இந்திய அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் கீழேயே செயல்படுகின்றன. அரசுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பிப்பதன் மூலம் மட்டுமே ஒரு நீதிபதி சுதந்திரமானவர் ஆகிவிட முடியாது. ஒரு நீதிபதிக்கு எப்போதும் ஒரு கடமையுணர்வு இருக்க வேண்டும்.. ஒரு நீதிபதி என்பவர் பொதுமக்களின் உரிமைகள், அரசியலமைப்பு விவகாரம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, ஒரு கடமையும் உள்ளது என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் எப்படி செயல்பட வேண்டும் தனது தீர்ப்பு குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு நீதிபதி செயல்படக்கூடாது. நாம் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். மக்கள் என்ன சொல்வார்கள் என்பது நமது முடிவெடுக்கும் முறையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது.. இருக்கவும் கூடாது. நான் தனிப்பட்ட முறையில் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகளை எப்போதும் நிலைநிறுத்தியுள்ளேன். எனது தீர்ப்புகள் மற்றும் பணி இதைக் காட்டும்” என்று அவர் தெரிவித்தார்.
