நெல்லை காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். நயினார் நாகேந்திரனிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் சுமார் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இரண்டாம் இடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 3வது இடம் பிடித்தார். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற ராபர்ட் புரூஸ், தமது வேட்பு மனுவில் சொத்து, வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை மறைத்ததாகக் கூறி, அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ராபர்ட் புரூஸ்-க்கு சொந்தமான சொத்துகள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், அவர் மீதான வழக்கு தொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்த நயினார் நாகேந்திரன், 19 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், நயினார் நாகேந்திரனிடம் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் சுமார் 1 மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினார். ராபர்ட் புரூஸுக்கு எதிரான வழக்கு, அவரது சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களைப் பெற்றது உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை நயினார் நாகேந்திரனிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்து குறுக்கு விசாரணை நடத்தினார். குறுக்கு விசாரணை இன்று முடிவடையாத நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி ஜெயச்சந்திரன், அன்றைய தினம் நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
