சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்!

புதிதாக வெளியாகும் படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது என்றும், ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் என்றும் என்று கூறியதுடன், திரைப்படங்களை விமர்சனம் செய்ய தடை விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.

இன்றைக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்வது என்பது அதிகமாக உள்ளது. எந்த பாடமும் நன்றாக இருக்கிறது என்று ஆன்லைன் விமர்சகர்களிடம் சான்றிதழ் வாங்க முடிவது இல்லை. படம் நன்றாக இருக்கிறது என்ற விமர்சனங்களைவிட, படம் நன்றாக இல்லை என்ற விமர்சனங்களே அதிகமாக உள்ளது. அதேபோல் படத்தை விமர்சனம் என்ற பெயரில் கழுவி ஊற்றுவது அதிகரித்துள்ளது. ஒரு நடிகரின் படத்தை விமர்சனம் என்ற பெயரில் ஓடவிடாமல் செய்வது அதிகமாக நடக்கிறது. அதேபோல் படங்கள் குறித்து நெகட்டிவ் ரிவியூ போட்டால் தான் வியூஸ் வரும் என்பதால், அதற்காக விமர்சிப்பவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அதேபோல் பணம் வாங்கி கொண்டு படம் சூப்பபர் என்று விமர்சிப்பவர்களும் அதிகமாக உள்ளது. சினிமா ரிவியூக்கள் எல்லாமே உண்மை இல்லை என்ற நிலை தான் இருக்கிறது. சில சினிமா ரிவியூ செய்பவர்கள் பணம் தராவிட்டால் மோசமாக படத்தை விமர்சித்து ஓடவிடாமல் தடுப்பதாகவும் தயாரிப்பாளர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்கள்.

அதேபோல் சில நடிகர்களின் ரசிகர்கள், எதிர் தரப்பு படத்தை விமர்சிப்பதும் நடக்கிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என நட்சத்திர நடிகர்களின் படங்கள் முன்பை விட மோசமாக விமர்சிக்கப்படுகிறது. இந்த விமர்சனங்களை உண்மை என்று நம்பி பலர் படத்திற்கு போவதே இல்லை. இது படத்தின் வசூலை பாதிக்கின்றன. இதனால் பட தயாரிப்பாளர்கள் பலர் சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார்கள்.

இந்த சூழலில் புதிதாக வெளியாகும் சினிமா படங்கள் குறித்து 3 நாட்கள் ஆன்லைனில் விமர்சனம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கூறும் போது, புதிய படங்கள் வெளியாகும் போது,அந்த படங்கள் குறித்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையாகும் . இதில் சமூக வலைதளங்களில் பட தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது. சினிமா விமர்சனங்களை தடை செய்வது என்பது, பேச்சு சுதந்திரத்துக்கான உரிமையில் தலையிடுவதற்கு சமம் ஆகும். இதனை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புரிந்து கொள்ள வேண்டும். மனுதாரர்கள் கேட்டுள்ள நிவாரணம் ஏற்க முடியாதது. அதனை நீதிமன்றம் வழங்க முடியாது.

சினிமா தியேட்டர்களுக்கு சவாலாக ஓடிடி தளங்கள் உருவாகி உள்ளது. இதை திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தோதாக மறந்துவிட்டது போல் தோன்றுகிறது. புதிய படங்களை வீடுகளில் இருந்து தங்கள் வசதிக்கு ஏற்றபடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்து கொண்டே வருகிறது. நீதிபதிகள் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஏனெனில் சமூக வலைதளங்களில் என்னையும்(நீதிபதி) விமர்சனம் செய்வதை நீங்கள் காண முடியும் அனைத்தையும் தடுக்க முடியாது. இன்று யாராலும் எதை குறித்தும் விமர்சனம் செய்ய முடியும். இதனை கட்டுப்படுத்த இயலாது. இங்கு ஒருவரை தடுத்து நிறுத்தினால், மற்றொருவர் வெளிநாட்டில் இருந்து செய்வார். அப்போது என்ன செய்ய முடியும். தயாரிப்பாளர்கள் கோரிக்கைப்படி உத்தரவு போட்டால், அதனை எப்படி செயல்படுத்துவீர்கள். அமல்படுத்த முடியாத உத்தரவை பிறப்பிப்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

இன்றைய உலகம் சமூக வலைதளங்களின் பிடியில் உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனத்தில் இருந்து தனி நபர்கள்/ அமைப்புகள்/ எந்த நாடும் தப்பிக்க இயலாது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பது சமூக வலைதள காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான். மக்கள், படங்களை பார்த்த பிறகே அது குறித்து முடிவு செய்ய வேண்டும். படங்கள் குறித்து மற்றவர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்யக்கூடாது” இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.