ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான் காரணம் என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
பாதுகாப்பு அமைச்சர் எஸ்சிஓ-ன் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்து முடிவுக்கு வந்துள்ளது. அவர்களால் ஒரு கூட்டு அறிக்கையை ஏற்க முடியவில்லை. சில உறுப்பு நாடுகள் சில விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, ஆவணத்தை இறுதி செய்ய முடியவில்லை. பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்று இந்தியா விரும்பியது. இதனை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு ஏற்க முடியாததாக இருந்தது. எனவே அறிக்கை ஏற்கப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் எதிர்த்துப் போராட இந்த 11 நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பகல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பற்றி குறிப்பிடாததோடு, பாகிஸ்தானில் நடந்த சம்பவங்களைப் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டதே இந்த கூட்டு பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம். சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதம் குறித்து இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது என்றும், இதுபோன்ற செயல்களை ஆதரிக்கும் நாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். நமது பிராந்தியத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள் அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பற்றாக்குறையுடன் தொடர்புடையவை என்றும், இந்தப் பிரச்சினைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.
