அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானதையடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வந்தவர் கந்தசாமி (60). தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதில் 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். வால்பாறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளராகவும் அமுல் கந்தசாமி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், உடல் உறுப்பு தொற்றினால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி காலமானார். இதையடுத்து வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை, தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள், எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில், இடைத்தேர்தல் தேவையில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி காலமானதையடுத்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நடைமுறை. ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாத காலமே இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனவே, அதுவரை எம்.எல்.ஏ இல்லாத தொகுதியாகவே வால்பாறை சட்டமன்றத் தொகுதி இருக்கும் எனத் தெரிகிறது.
