திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள்: தமிழிசை செளந்தரராஜன்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று ஜேபி நட்டாவை சந்தித்து பரிந்துரை பட்டியலை அளித்திருந்தார். அதில் நடிகைகள் குஷ்பு, மீனா மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களின் பெயர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென இன்று பாஜகவின் முக்கிய நிர்வாகியான தமிழிசை செளந்தரராஜன் டெல்லிக்கு புறப்பட்டார். இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் நட்டாவின் அழைப்பு காரணமாக டெல்லி செல்கிறேன். ஜூலை 1ஆம் தேதியன்று பாஜகவின் அந்தமான் நிக்கோபார் தீவின் மாநில தலைவர் தேர்வு நடக்கவுள்ளது. அதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்காமல், திமுக நிர்வாகிகளை மட்டும் சந்தித்து வருகிறார். திமுகவினருக்கு பதிலாக போராடி வரும் மருத்துவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவான பேட்டி கொடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பெரியார் விலை போக மாட்டார் என்பதால், லோக்சபா தேர்தலின் போது கனிமொழி பெரியார் புகைப்படத்தை நீக்கினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் விளம்பரம் மட்டுமே செய்து வருகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடுகள் மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு போதைப்பொருளின் தலைநகரமாக உள்ளதாக அமித்ஷாவே விமர்சித்துள்ளார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் இருக்கும். மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.