கைதான காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டு போடப்பபடுவார்களா?: திமுக எம்எல்ஏ!

சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் எனப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில காட்டமான கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

சிவகங்கை அடுத்துள்ள திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். திருட்டு வழக்கு ஒன்றில் இவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார். போலீஸ் தாக்குதல் காரணமாகவே அஜித் குமார் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போதும் கூட நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கிடையே இப்போது திமுக எம்எல்ஏ ஒருவரே இது குறித்து விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட காவலர்கள் மனித உயிரின் மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்டவர்கள் என்றும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோயில் காவலாளி, இளைஞர், 27 வயதே ஆன அஜித் குமார் காவல்துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததிருப்பது மிக மிகக் கண்டனத்துக்கு உரியது. காவல்துறை என்கிற பெயரில் மனித மிருகங்களாக மாறி அஜித் குமாரை கொடூரமாக தாக்கிக் கொன்றிருக்கிறார்கள் இந்த மனித பிண்டங்கள். ஒரு திருட்டு வழக்கை இப்படி தான் விசாரிக்க வேண்டுமா என்ன? மனித உயிரின் மீது அக்கறை இல்லாத, குரூரபுத்தி கொண்ட தமிழக காவல்துறையை சேர்ந்த இவர்களைக் கைது செய்து உத்தரவிட்டிருக்கிறது அரசு. கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்கிற பெயரில் கழிவறையில் வழுக்கி விழுவார்களா? அல்லது தப்பி ஓடினார்கள் என்று சொல்லி என்கவுண்டர் செய்யப்படுவார்களா? சாமானியனுக்கு ஒரு நியாயம் காவல்துறைக்கு ஒரு நியாயமா?

எப்படி பார்த்தாலும் விசாரணை என்கிற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி ஒரு மனித உயிரை எடுத்த இவர்களுக்கு எந்த கட்டத்திலும் மன்னிப்பு கிடைக்கக் கூடாது. காவல்துறை அஜித்குமாரை தாக்கும் அந்த வீடியோ காட்சியைப் பார்த்தால் திருட்டு வழக்கிற்கு இப்படிதான் நடவடிக்கை எடுக்குமா காவல்துறை என்கிற ரீதியில் ரத்தம் உறைந்து போகிறது. ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் மக்கள் பணியே மகேசன் பணி என்று ஒவ்வொரு மாவட்டமும் நடந்தே சென்று மக்களைச் சந்தித்து அவர்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கிறார் நம் முதல்வர். காவல்துறையினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு பாராட்டுக்கள்.

கட்சியில் யாரும் தவறு செய்தால் பல வருடம் நமக்காக உழைத்த கட்சியினர் என்று பாராமல் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் காவல்துறை மீது மட்டும் ஏன் இந்த மென்மை போக்கு? இவர்கள் உடனடியாகக் கட்டாயம் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த மிருகங்களுக்கு அதிகபட்சத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். டிஜிபி சார், இந்த காவலர்கள் எந்த கழிவறை வழுக்குமோ அங்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டும் அல்லது எங்கு தப்பித்து செல்ல வசதியாக இருக்குமோ அங்கு சென்று விசாரிக்கப்பட வேண்டும்.. கஷ்டப்பட்டு கட்சிக்காரன் உழைப்பான். நீங்க 5 நிமிடத்தில் பெயரைக் கெடுத்துருவீங்க.. நல்லா இருக்கு கதை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.