“லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குநர் அமீர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் அமீர் அஜித் குமார் கஸ்டடி மரணம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
காவல்துறை என்பது முழுக்க முழுக்க மக்கள் பக்கம் இல்லை என்று பல நூறு முறை சொல்லி இருக்கிறேன். அது அதிகாரத்தின் பக்கம்தான் நிற்கும். செல்வந்தர்கள் பக்கம்தான் நிற்கும். அப்படிதான் நின்றிருக்கிறது. அதுதான் வரலாறு. எங்கேயாவது ஒன்று இரண்டு சூழல்களில் அவர்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பயந்து மக்கள் பக்கம் நிற்பார்கள். பொதுவாக யாருக்கு கட்டுப்படுவார்கள் என்றால் தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்குத்தான். அந்த அதிகாரி தனக்கு மேல் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு கட்டுப்படுவார். இதுதான் காவல்துறையின் கட்டமைப்பு. இதில் யாரையும் குறை சொல்வதற்கில்லை.
இந்த சிறப்புப் படை உள்ளே வந்து நுழைந்து அடிக்கிறார்கள் என்றால் வெறுமனே அப்படி செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாரோ அறிவுறுத்தியிருக்கிறார். அவர் யார்? விவசாயப் போராட்டம் நடைபெறுகிறது என்றால் அதில் தடியடி நடக்கும். அந்த தடியடியை நடத்துகிறவர் யாராக இருப்பார்கள் என்றால் ஒரு விவசாயி மகனாக இருப்பான். அவர் கிராமத்தில் இருந்து போலீஸ் வேலைக்கு வந்தவராக இருப்பார். எனது அதிகாரி சொன்னார் அதனால்தான் நான் அடித்தேன் என்பார். ஒரு அதிகாரி சொன்னாலும் அடித்தால் நம்முடைய வேலை பறிபோகும் என்பதை இந்த திருப்புவனம் சம்பவம் காவலர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
இந்த ஆட்சியில், அந்த ஆட்சியில் என்று இல்லை. எல்லா ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும். உலகம் முழுவதும் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா? அதுதான் என்னுடைய கேள்வி. சாத்தான்குளத்திற்கு கொந்தளித்தவர்கள், திருப்புவனத்திற்கு மெளனம் காப்பது ஏன் என்ற கேள்வியை பார்க்க முடிகிறது. ஆனால், அப்போதைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் சம்பவத்தை வெளிப்படையாக மறைத்தார். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று பொய் சொன்னார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கூறினார். அப்படி ஏதும் இப்போது நடந்திருக்கிறதா?” எனப் பேசினார்.
திமுக ஆட்சியில் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமீர், “எங்க வீட்டில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். உங்க வீட்டிலும் அப்படித்தான் இருப்பார்கள். யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு அரசு துணை போயிருக்கிறதா? செய்த தவறை மறைத்து பேசியுள்ளதா என்பதை சொல்லுங்க.. பாலியல் சீண்டல் நடந்திருந்தால் அதற்கு அரசு துணை போனதாக இருந்தால் அது தவறு. அரசு சரியாக செய்திருக்கிறது. திமுக அரசு மீது களங்கம் ஏற்படுத்த பலரும் குறை கூறுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
