தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலைக்கு பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளராக இருந்தவர் மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற தவாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை வந்திருந்தார். இதன்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிவடைந்த பின், மீண்டும் காரைக்காலுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். இந்த நிலையில் செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே திடீரென கார் வழிமறிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் காரை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காரில் இருந்த மணிமாறனை வெளியில் இழுத்து போட்டுள்ளனர். இதனால் மணிமாறன் அச்சத்தில் ஓடி இருக்கிறார். ஆனால் இரு கார்களில் வந்த கும்பல், மணிமாறனினை ஓட ஓட விரட்டி தலையை முற்றிலும் சிதைத்து கொலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே இந்த சம்பவம் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலைக்கு பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி ஆதரவாளர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, திடீரென வழிமறித்த மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேவமணியின் வீட்டிற்கு அருகிலேயே நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவம் காரைக்கால் பகுதியையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக தவாகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் தேவமணியின் ஆதவாளர்கள் மூலமாக இந்த சம்பவம் பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு பின் மணிமாறன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த மணிமாறன் அவர்களை படுகொலை செய்த கூலிப்படையை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு இன்று (04.07.2025) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மணிமாறன் அவர்கள் இதில் பங்கேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார். பின்னர், மணிமாறன் தனது காரில் காரைக்கால் சென்று கொண்டிருந்தார். அப்போது, செம்பனார் கோயில் பகுதியில் காரை வழிமறித்த கூலிப்படை, மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளது இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.
திரு.மணிமாறன். அவர்களின் மறைவுக்கு காரணமான, கூலிப்படையை விரைந்து கைது செய்து, அக்கும்பலுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மணிமாறன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
