ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த 1ஆம் தேதி எல்லைத் தாண்டியதாக சிறைபிடித்தது. அத்துடன் மீனவர்களின் விசைப்படகு ஒன்றையும் பறிமுதல் செய்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறைக்காவல் முடிந்த பின் 7 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது 7 பேரின் சிறைக்காவலை வரும் 17ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து மீனவர்கள் 7 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்ற கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
