பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியது பற்றி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வருகிற செப்டம்பர் மாதத்துடன் 75 வயது பூர்த்தியாகிறது. அவரை மறைமுகமாகக் குறிப்பிட்டுதான் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில், “விருது பெற்ற ஏழை பிரதமர்! செப்டம்பர் 17, 2025 அன்று 75 வயதாகிறது என்பதை மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாக நினைவுபடுத்தியுள்ளார்!
ஆனால், பிரதமரும் ஆர்எஸ்எஸ் தலைவரிடம் சொல்லலாம். உங்களுக்கும்(மோகன் பாகவத்) வருகிற செப்டம்பர் 11, 2025 அன்று 75 வயதாகிறது என்று! ஒரே அம்பு, இரு இலக்குகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
மோகன் பாகவத்தின் கூற்றைக் குறிப்பிட்டுப் பேசிய சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத், “எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் முதலான தலைவர்களுக்கு 75 வயதானபோது, அவர்களை ஓய்வுபெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். ஆனால், அதே விதியை தனக்கும் பிரதமர் மோடி பயன்படுத்துகிறாரா என்பதைப் பார்ப்போம்” என்று கூறினார்.
இருப்பினும், பாஜகவின் சின்னமாகவும் மிகவும் பிரபலமான தலைவராகவும் பிரதமர் மோடி இருப்பதால், அவரின் ஓய்வு என்பது கணிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
