திமுக எம்பி கல்யாணசுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சு.கல்யாண சுந்தரம் எம்பி அவர்களை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ (நாக்கியன்கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்யாண சுந்தரம், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராக உள்ளார். மேலும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட்டின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கும்பகோணம் அருகே பம்பப்படையூர் கிராமம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர். கடந்த 1940 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 82. இவரது தந்தை சுந்தர்ராஜன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 1952-ல் பம்பப்படையூரில் அப்போதைய முதல்வர் இராஜாஜி, காமராஜர், கக்கன், ஜி.கே.மூப்பனார் ஆகியோரை அழைத்து வந்து பூமிதான இயக்கத்திற்கு தனது சொந்த நிலத்தில் 2 ஏக்கரை தானமாக வழங்கியவர் இவரது தந்தை சுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
