எனது உயிருக்கு ஆபத்து: டிஎஸ்பி சுந்தரேசன்!

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இவ்விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் சீருடை உடன் சாலையில் நடந்து சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கள்ள மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் தன் மீது அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அவர் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மீது பல்வேறு புகார்கள் இருப்பதாகவும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தன் மீது ஆதாரமற்ற புகார்களுக்கு கூறப்படுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை இடமாற்றம் செய்கிறார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப் பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் ‌. இதுதான் காவலர்களின் நிலை. ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன். போலீசார் நேர்மையான அதிகாரிகளை விட மாட்டார்கள். குற்றச்சாட்டுகளை வைக்கத் தான் செய்வார்கள். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா..! நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். எனது தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்த செய்திகளை பார்த்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பாக விடுமுறை கேட்டு செல்போனில் மாவட்ட எஸ்பிக்கு தகவல் அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும். இது தொடர்பான பிரச்சனை டிஐஜிக்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை. 11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை.

டிஎஸ்பி விஷ்ணு பிரியா நாமக்கல்லில் மறைந்தார். அந்த வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒரு காவலராக இருந்தேன். அடுத்து விஜயகுமார் ஐபிஎஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை. ஆனால் அவர் தங்கம் என தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.