துணை ஜனாதிபதி பதவியில் இருந்து தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானாவில், கோகல் சந்த், கேசரி தேவி தம்பதிக்கு கடந்த 1951-ம் ஆண்டு மே 18-ந் தேதி பிறந்த ஜெகதீப் தன்கர், பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், அரசியலில் குதித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள கவர்னராக பணியாற்றினார். இதையடுத்து 2022-ம் ஆண்டு துணை ஜனாதிபதியானார்.
இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது உடல் நிலையை காரணம் காட்டி, துணை ஜனாதிபதி பதவியை நேற்று இரவு திடீரென்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிவைத்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவைத் தலைவரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பி.க்களுடன் இருந்தேன், இரவு 7:30 மணிக்கு தொலைபேசியில் அவருடன் பேசினேன்.
சந்தேகத்திற்கு இடமின்றி, தன்கர் தனது உடல்நிலைக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், அவரது முற்றிலும் எதிர்பாராத ராஜினாமாவில் கண்ணுக்குத் தெரிவதை விட அதிகமான விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. இருப்பினும், இது ஊகங்களுக்கு ஏற்ற நேரம் அல்ல. தன்கர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக விமர்சித்தார். நாளை (இன்று) மதியம் 1 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார். நாளை (இன்று ) நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருந்தார்.
அவர் நலம் பெற வாழ்த்துகிறோம், ஆனால் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரதமர், ஜெகதீப் தங்கரை அவரது மனதை மாற்றச் செய்வார் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நாட்டின் நலனுக்காக இருக்கும். குறிப்பாக விவசாய சமூகம் பெரிதும் நிம்மதியடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
