மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் நம்பெருமாள்சாமி மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவரும், கண் மருத்துவப் பேராசிரியருமான நம்பெருமாள் சாமி முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவத் துறையினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
புகழ்பெற்ற மருத்துவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவருமான பத்மஸ்ரீ நம்பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன்.
தென் தமிழ்நாட்டில் மிக எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும், அமெரிக்காவில் மேல்படிப்பையும் முடித்து இந்தியாவின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர் என்ற பெயர் பெற்றவர் நம்பெருமாள்சாமி. ஏழை எளியோருக்கும் கண்மருத்துவம் கிடைக்க வேண்டும், கண்பார்வைக் குறைபாட்டை நீக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான மக்களுக்குக் கண்பார்வை அளித்த நம்பெருமாள்சாமியின் சேவைக்கு அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற டைம் இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராகவும் இவரைத் தேர்வு செய்திருந்தது.
நபெருமாள்சாமியிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் மருத்துவர்களாகி அவரது வழியில், ஏழை எளிய மக்களுக்குக் கண் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்ற வகையில் இத்துறையில் அவர் புரிந்துள்ள சாதனை காலத்தால் அழியாதது.
பல லட்சம் பேருக்கு பார்வையளித்த மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு மருத்துவத்துறைக்கும் மதுரை மக்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், மருத்துவத்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
அரவிந்த் கண் மருத்துவமனை, நீரிழிவு விழித்திரை நோய் நிபுணர், மாமதுரையின் மற்றுமொரு அடையாளம் நம்பெருமாள் சாமி காலமானார். குறைந்த பார்வை உதவி மையத்தை இந்தியாவில் முதன் முறையாக அரசு இராஜாஜி மருத்துவமனையில் நிறுவியவர். கண் அறுவை சிகிச்சையில் அசெம்பிளி லைன் செயல்திறன் கொண்டு வந்தது உள்ளிட்ட ஏராளமான செயற்கரிய செயல்களை செய்த பெருமைக்குரியவர்.
2010 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை மருத்துவர். நம்பெருமாள்சாமியை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.
நம்பெருமாள்சாமி தலைமையில், அரவிந்த் கண் மருத்துவமனை, 2010 ஆம் ஆண்டுக்கான கான்ராட் என். ஹில்டன் மனிதாபிமான பரிசைப் பெற்றது .இது மனித துன்பத்தைப் போக்க அசாதாரணமான பணிகளைச் செய்யும் நற்செயலுக்கு வழங்கப்படும் பெருமைக்குரிய விருது.
மருத்துவத்துறையின் அடிப்படையாக சேவை குணம் இருக்க வேண்டும் என்பதில் எப்பொழுது கவனம் கொண்டிருப்பவர். இவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கும் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்திற்கும் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
