முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் செல்லாதது ஏன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார். இன்று இரவு தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி, நாளை திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மூலமாக மக்களைச் சந்திக்கிறார். அதன்பின் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் சோழன் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இதனால் தமிழக பாஜகவினர் பரபரப்பாகி இருக்கின்றனர்.
பிரதமர் மோடியை வரவேற்பதற்காகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலமாகத் தூத்துக்குடி புறப்பட்டார். அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:-
வேற்றுமையில் ஒற்றுமையே நமது பெருமை. ஆனால் இங்கே சிலர் பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள். இங்கே பெரிய புராணம்தான் பேசப்பட வேண்டும். பெரியார் புராணம் அல்ல.. சோழர்கள் ஆன்மிகத்தோடு சேர்த்து தமிழை வளர்த்தனர். அதனால்தான் காவித்தமிழ் என்று சொல்கிறேன். சோழகங்கம் ஏரிக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.12 கோடி ஒதுக்கி இருக்கிறார். பிரதமர் மோடி வருகிறார் என்றவுடன் கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றி முதல்வர் சிந்திக்கிறார். தமிழகத்தைப் பற்றிச் சிந்திப்பதை விடவும், மோடியை பற்றி அதிகமாகச் சிந்தித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். பாஜகவை பற்றி வீடு வீடாகச் சென்று பேசுங்கள் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இன்று தொடங்கி வைக்கப்போகும் திட்டங்கள் பற்றியும் மக்களிடம் சொல்லுங்கள்.
அதேபோல் தனியார் மருத்துவமனை ஒன்றில் அமர்ந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்று முதல்வர் பேசுகிறார். அவர் அரசு மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு கூட உங்களுடன் ஸ்டாலின் என்று பேசலாம் தானே.. மக்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தானே நோக்கம்.. ஆனால் நரேந்திர மோடி அரசு மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.
