நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்ற வாயில்களில் நாளை ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை நீதிமன்ற வாயில்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்சனைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அடங்கிய அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து வாஞ்சிநாதன் ஆஜரானார்.

அப்போது “எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக விமர்சிக்கிறீர்களா? இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா” என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.

இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்துள்ள அவமதிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக அடிப்படையற்ற இயற்கை நீதிக்கு எதிரான வகையில் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி, நாளை (ஜூலை 28) காலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள நீதிமன்ற வாயில்களில் வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.