ராமேசுவரம் நினைவிடத்தில் அப்துல் கலாமின் 10-வது நினைவுதினம் அனுசரிப்பு!

முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினை​விடத்​தில் ஆயிரக்கணக்​கானோர் அஞ்​சலி செலுத்​தினர்.

நாட்​டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்​துல் கலாம் தனது பதவிக் காலத்​துக்​குப் பின்​னர் நாடு முழு​வதும் சுற்​றுப் பயணம் மேற்​கொண்டு பள்​ளி, கல்லூரிகளில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றுப் பேசி, மாணவர்​களுக்கு உத்​வேகத்தை அளித்து வந்தார். மேகாலயா மாநிலம் ஷில்​லாங்​கில் உள்ள கல்​லூரி விழா​வில் 2015 ஜூலை 27-ம் தேதி பேசிக் கொண்​டிருந்​த​போது திடீரென மயக்கமடைந்து உயி​ரிழந்​தார். பின்​னர், அப்​துல் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்​கரும்பு என்​னும் இடத்​தில் அடக்கம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், கலாமின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​பட்​டது.

பேக்​கரும்பு அப்​துல் கலாம் நினை​விடத்​தில் நேற்று காலை கலாமின் சகோ​தரர் மகன் ஜெயினுலாபு​தின், மகள் நசிமா மரைக்காயர், மரு​மகன் நிஜாம், பேரன்​கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்​றும் குடும்​பத்​தினர் இஸ்​லாமிய முறைப்​படி சிறப்​புப் பிரார்த்​தனை செய்​தனர். ராமேசுவரம் பள்​ளி​வாசல் ஜமாத் தலை​வர் முகம்​மது நாசர், பாஜக​வின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம் மற்​றும் பல்​வேறு சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்​து, இஸ்​ரோ தலை​வர் நாராயணன், ராம​நாத​புரம் மாவட்ட ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், வட்​டாட்​சி​யர் அப்​துல் ஜபார் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். மேலும், பல்​வேறு அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், பொது​மக்​கள், மாணவ, மாணவி​கள், ராமேசுவரம் வந்த சுற்​றுலாப் பயணி​கள் உள்​ளிட்​டோரும் கலாமின் நினை​விடத்​துக்​குச் சென்று அஞ்​சலி செலுத்​தினர்.