இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை: ஜெய்சங்கர்!

நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடி- டிரம்ப் இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பகல்காமில் மிக மோசமான தாக்குதல் நடந்தது. பகல்காமில் ஊடுருவிய தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அப்பாவி மக்கள் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்து வருகிறது. நேற்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்தார். இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் லோக்சபாவில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் மோதலை யாரும் மத்தியஸ்தம் செய்யவில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். குறிப்பாக பகல்தாம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை பிரதமர் மோடி-டிரம்ப் இடையே எந்தவொரு உரையாடலும் நடக்கவில்லை என்பதை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

மேலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் குறித்து ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். அதாவது அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தான் முதலில் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு பேசியதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருவதாகப் பிரதமர் மோடியிடம் அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ் கூறியதாகவும் அதற்கு இந்தியா வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்று மோடி பதிலளித்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

இது மட்டுமின்றி, பாகிஸ்தான் இந்திய ராணுவ டிஜிஎம்ஓ மூலம் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்தால் மட்டுமே பரிசீலிக்க முடியும் என்பதை இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும். மே 9,10 தேதிகளில் பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாகத் தெரிவித்த ஜெய்சங்கர், மே 10ஆம் தேதி பல நாடுகள் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக இந்தியாவிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்தியா பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதுவரை குறைந்தது 25 முறை இது குறித்துப் பேசிவிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாகத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்திலேயே இப்போது விளக்கமளித்திருக்கிறார்.

நேற்று மாலை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்துர் குறித்து லோக்சபாவில் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். இதனால் கோபமடைந்த அமித் ஷா, சட்டென எழுந்து எதிர்க்கட்சிகளை மிகக் காட்டமாக விமர்சித்தார். அதாவது அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே “ஆபரேஷன் சிந்துர்” சமயத்தில் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை இரு தலைவர்களுக்கும் இடையில் எந்த தொலைப்பேசி உரையாடலும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அப்போதுதான் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து திடீரென எழுந்த அமித் ஷா, “எதிர்க்கட்சிகள் தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை நம்புவதில்லை. ஆனால் வேறு சில நாடுகளை நம்புகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபம் உள்ளது. அவர்களின் கட்சியில் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அவர்களின் கட்சியின் விஷயங்களை எல்லாம் இங்கு அவையில் திணிக்கக் கூடாது. அதனால்தான் அவர்கள் அங்கு (எதிர்க்கட்சி வரிசை) அமர்ந்திருக்கிறார்கள். இன்னும் 20 வருடங்களுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்” என்று அமித் ஷா காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய விளக்கங்களை அளித்திருந்தார். டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்த ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கினார். அப்போது எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் தொடர்ந்ததால், மீண்டும் அமித் ஷா குறுக்கிட்டுப் பேசினார். அமித் ஷா பேசுகையில், “அவர்களுடைய தலைவர்கள் பேசும்போது, நாங்கள் பொறுமையாகக் கேட்டோம்.. நாளை அவர்கள் எத்தனை பொய்களைச் சொன்னார்கள் என்று நான் பட்டியலிடுவேன். இப்போது, அவர்களால் உண்மையைச் சகிக்க முடியவில்லை. இவ்வளவு முக்கியமான பிரச்சனை விவாதிக்கப்படும்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது, இதுபோல இடையூறு செய்வது சரியா?” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.