நெல்லையில் கொல்லப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த இளைஞர் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனிடையே, கவின்குமார் கடந்த 27ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.
கவின்குமார் கொலை வழக்கு கடந்த 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேவேளை, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட கவின்குமாரின் உடல் நேற்று முன் தினம் தகனம் செய்யப்பட்டது. கவின்குமாரின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, கவின்குமாரின் தந்தை சந்திரகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில், கவின்குமாரின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்திரகுமாருக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் கவினின் காதலியான சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மீண்டும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் சுபாஷினியிடம், கவினை யார் அங்கு வரவழைத்தது? அவரை அங்கிருந்து யார் அழைத்து சென்றது? கவினுடன் அப்போது யாரெல்லாம் வந்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக கொலை நடந்த இடத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பார்வையிட்டனர். மேலும் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்து துப்பு துலக்கினர்.
இதற்கிடையே சுர்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
