தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக நடைபெறும் இக்கூட்டத்தில், ஒரு முக்கியமான பொதுநலக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை தனிப்பட்ட அலுவலகம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுடன் நேரடி தொடர்பு மற்றும் பணிகள் சிறப்பாக நடைபெற இவ்வலுவலகங்கள் அவசியமானவை. எனவே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவலக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அதே நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி தடையின்றி தாமதமின்றி மக்களிடம் சென்றடைய, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி உட்பட தோழமை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சந்திக்கும் ஒரு சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
