தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ்: ஆவணங்கள் ஆய்வு

மத்திய பணியாளர் தேர்வாணையம் வழியே, மத்திய நிறுவனங்களில் சேர்ந்த பலர், தமிழக பள்ளிக் கல்வி துறை பெயரில் போலி சான்றிதழ் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி., சார்பில், தபால் துறையில் கடந்த ஆண்டு பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் விபரங்கள், தமிழக தபால் துறைக்கு வந்தன. அவற்றில் பலவற்றில், தமிழக பள்ளிக் கல்வித்துறை பெயரிலான பத்தாம் வகுப்பு சான்றிதழில், முதல் மொழியாக ஹிந்தியை படித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த தபால் துறை, புதிதாக தேர்வானோரின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பியது. இதன் முடிவில், பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை பெயரில் போலியாக தரப்பட்டது அம்பலமானது.

இந்நிலையில், மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஷிப்பிங் கார்ப்பரேஷன், சி.ஐ.எஸ்.எப்., – தபால் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய நிறுவனங்களில், சமீபத்தில் பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறை மட்டுமின்றி, பிற மாநில பள்ளிக் கல்வி துறையின் சான்றிதழ்களும் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, 2,000த்துக்கும் மேற்பட்டவர்களின் சான்றிதழ்களை, உண்மை தன்மை சோதனை நடத்த, பல்வேறு கல்வித் துறைக்கு மத்திய நிறுவனங்கள் அனுப்பி உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.