ஆந்திராவில் ரெயிலைவிட்டு இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதி 5 பேர் பலி!

ஆந்திராவில் ரெயிலைவிட்டு இறங்கியபோது மற்றொரு ரெயில் மோதி 5 பேர் பலி. உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆந்திரா மாநிலம் கெசந்திராபாத்தில் இருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 10 மணி அளவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பிகாடம் மற்றும் விஜயநகரம் மாவட்டம் ஸ்ரீ புரப்பள்ளி இடையே சென்று கொண்டு இருந்தது. இரவு நேரம் என்பதால் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது ரெயில் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததாக தெரிகிறது. இதனைக் கண்டு திடுக்கிட்ட பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்து விடும் என்ற அச்சத்தில் பயணிகள் அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக ரெயிலில் இருந்து கீழே இறங்கினர்.

ஒரு சில பயணிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது புவனேஸ்வரில் இருந்து மும்பை சென்ற கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக வேகத்தில் வந்தது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் வருவதை கவனிக்கவில்லை. வேகமாக வந்த ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி 5 பயணிகள் உடல் துண்டாகி இறந்தனர். அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ரெயில்வே போலீசார் மற்றும் ஸ்ரீகாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விபத்து நடந்தது இரவு நேரம் என்பதால் சம்பவ இடம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதையடுத்து போலீசார் டார்ச்லைட் வெளிச்சத்துடன் விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிருக்கு போராடிய வாலிபர் ஒருவரை மீட்ட போலீசார் ஸ்ரீகாகுளம் சர்வஜன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் துண்டான 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீகாகுளம் கலெக்டர் ஸ்ரீ கேஷ்.பி.லக்கர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயிலில் சிக்கி இறந்தவர்களில் 2 பேர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் நபர் ஒடிசா மாநிலம் பிரம்மபுரத்தை சேர்ந்த விக்கி எனவும் தெரியவந்தது. மேலும் இறந்தவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது.