போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க 90 ஸ்பைஸ் ஜெட் விமானிகளுக்கு இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. விமானிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. போதிய விமானிகள் உள்ளதால் தடையால் பாதிப்பு இல்லை என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை டிஜிசிஏ தலைவர் அருண் குமார் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
ஸ்பைஸ் ஜெட்டின் 90 விமானிகளை மேக்ஸ் விமானங்களை ஓட்டுவதற்கு டிஜிசிஏ தடை விதித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 மேக்ஸில் பயிற்சி பெற்ற 650 விமானகளைக் கொண்டுள்ளது. 90 விமானிகளுக்குப் மீண்டும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு மேக்ஸ் விமானத்தின் செயல்பாடுகளை பாதிக்காது. ஸ்பைஸ் ஜெட் 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்களை இயக்குவதற்கு சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். மேக்ஸில் பயிற்சி பெற்ற 650 விமானிகளில், 560 பேர் தொடர்ந்து பணியில் உள்ளனர். இது தற்போதைய தேவையைவிட அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.