இந்தியாவில் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மிசோரம், மராட்டியம், ஹரியானா மற்றும் டெல்லிக்கு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் இதனால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தி உள்ளார்.
தொற்று வேகமாக பரவாமல் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். தீவிர கண்காணிப்பு, உரிய நேரத்தில் சரியான சிகிச்சை, தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முகக்கவசத்தை அணிதல் ஆகியவை மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாநிலங்கள் மட்டும் அல்லாமல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மருத்துவ கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.