ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் அசோக் கெலாட் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும், இது இரண்டு அல்லது மூன்று தவணைகளாக பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.
மேலும், 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனற்ற மோடி அரசானது இரண்டு தொழிலதிபர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே செயல்படுகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் அந்த இரண்டு தொழிலதிபர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றன.
நாட்டில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்க மோடி அரசு துடித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானால் அங்கு இடஒதுக்கீடு இல்லாமல் போகக்கூடிய சூழல் உருவாகும். இதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் வேலைகளையும் இழக்கும் சூழல் ஏற்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களைப் போல வேலைவாய்ப்பை உருவாக்கும் முக்கியமான துறை விவசாயம். மத்திய அரசு அதன் திட்டங்களால் வேளாண் துறையையே சிதைத்து வருகிறது. விவசாயத்தையும் மோடி அவருக்கு நெருங்கிய இரண்டு தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார். பின் நாடு முழுவதும் விவசாயிகளின் கடும் போராட்டங்களை அடுத்து அந்தச் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. இப்படி நாட்டின் விவசாயம், பொதுத்துறை, வேலைவாய்ப்பு என எல்லாவற்றையும் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்படுகிறது. மோடிக்கு நெருக்கமான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே அவரின் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.