இந்துத்துவா பாஜகவுக்கு மட்டும் உரித்தானதல்ல: உத்தவ் தாக்கரே

இந்துத்வாவை தனக்கு மட்டுமே உரித்தானது என்பது போல உரிமை கொண்டாடுகிறது பாஜக. ஆனால் இந்துத்வா பாஜகவுக்கு மட்டும் உரித்தானதல்ல என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

கோலாப்பூர் வடக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவுக்கு ஆதரவாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக வாக்கு சேகரித்தார் உத்தவ் தாக்கரே. அப்போது அவர் பேசியதாவது:

இந்துத்வாவை தனக்கு மட்டுமே உரித்தானது என்பது போல உரிமை கொண்டாடுகிறது பாஜக. ஆனால் இந்துத்வா பாஜகவுக்கு மட்டும் உரித்தானதல்ல. பால் தாக்கரேதான், காவியையும், இந்துத்வாவையும் இணைத்தால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வழியைக் காட்டியவர். அதை பாஜக மறந்து விடக் கூடாது. காவி மீதும், இந்துத்வா மீதும் மாறாத பற்றுடைய கட்சி சிவசேனா. பாஜக போல விதம் விதமாக பெயரையும், கொள்கையையும் மாற்றும் வழக்கம் எங்களுக்கு இல்லை. முதலில் பாரதிய ஜன சங்கமாக இருந்தனர். பின்னர் ஜன சங்கமாக மாறினார். கொள்கைகளை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள் அவர்கள்.

2019 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா கட்சி வேட்பாளர் தோல்வியுற்றார். இத்தனைக்கும் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் அப்போது கூட்டணி இருந்தது. பாஜகவின் சதியால்தான் சிவசேனா வேட்பாளர் தோல்வியுற்றார்.

ராமர் தனக்கு மட்டுமே சொந்தமானவர் என்பது போல பாஜக நடந்து கொள்கிறது. ஒரு வேளை ராமர் பிறந்திருக்காவிட்டால் எதை வைத்து பாஜக பிரச்சினையைக் கிளப்பியிருக்கும் என்று தெரியவில்லை. எந்தப் பிரச்சினையை வைத்து பாஜக அரசியல் செய்திருக்கும் என்று தெரியவில்லை. பாஜகவுக்கு பிரச்சினைகளைத் தீர்க்கத் தெரியவில்லை. பிரச்சினைகள் அதிகரித்து விட்டதால்தான், மதத்தையும், துவேஷத்தையும் அது கையில் எடுத்துள்ளது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.