தமிழகத்தை மின் வெட்டிலிருந்து காக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தை மின் வெட்டிலிருந்து காக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடும் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் உற்பத்தி 80 சதவீத வரை பாதிக்கப்பட்டது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் ஒட்டு மொத்த மின் தேவை கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழகத்தின் மின் தேவை கடந்த மார்ச் 29-ந் தேதி வரலாறு காணாத அளவில் 17,196 மெகாவாட், அதாவது 37.57 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது.

மின்சாரப் பற்றாக்குறை காரணமாக ஆந்திரா, மராட்டியம், குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மின்வெட்டு இல்லை என்றாலும் கூட, கிராமப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. நிலைமையை மேம்படுத்தாவிட்டால், தமிழகத்திலும் மின்வெட்டு தீவிரமடையும்.

மின்னுற்பத்தியை அதிகரிப்பதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் இருந்தாலும், அது சாத்தியமாகாததற்கு காரணம், தேவையான அளவு நிலக்கரி கிடைக்காதது தான். தமிழ்நாடும் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் உற்பத்தி 80 சதவீத வரை பாதிக்கப்பட்டது. இப்போது நிலைமை மேம்பட்டுள்ள போதிலும், 4320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட தமிழக அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக கடந்த 11-ம் தேதி மாலை 3255 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.

தமிழ்நாடு அதன் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டை மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் தான் வாங்குகிறது. வாங்கப்படும் மின்சாரம் பெரும்பாலும் அனல் மின்சாரம் தான் என்பதால், நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்தால், பிற மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரமும் குறையும். அதனால், தமிழ்நாடு இருளில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கக்கூடும்.

அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்கான நிலக்கரி இருக்க வேண்டிய நிலையில், 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டும் தான் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கப்பல்கள் மற்றும் தொடர்வண்டிப் பெட்டிகளை ஏற்பாடு செய்து அதிக அளவிலான நிலக்கரியை கொண்டு வருவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது ஆகியவற்றின் மூலமாகத் தான் நிலைமையை சமாளிக்க முடியும். அடுத்த மாதம் முதல் காற்றாலை மின்னுற்பத்தி தொடங்கும் என்பதால் அதை முழுமையாக தமிழகமே கொள்முதல் செய்ய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை மின் வெட்டிலிருந்து காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.