இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு தாய் வயிற்று மக்கள். சகோதரர்கள். சில விஷமிகள் இவர்களைப் பிரிக்க முயல்கின்றனர் என எடியூரப்பா கூறியுள்ளார்.
சமீப காலமாக கர்நாடகத்தில் மத ரீதியிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. முஸ்லீம்களைக் குறி வைத்து பாஜகவினரும், இந்துத்வா அமைப்பினரும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. பின்னர் முஸ்லீம்கள், இந்துக் கோவில்களுக்கு அருகே கடை நடத்த தடை விதிக்கப்பட்டது. அடுத்து ஹலால் உணவு சாப்பிட தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து பாஜகவைக் கண்டித்து குரல் வந்துள்ளது. அது முன்னாள் முதல்வர் எடியூரப்பாதான். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். நான் அவருக்குக் கூறிக் கொள்வதெல்லாம், இந்த பிரிவினை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து சமூகத்தினரும் மரியாதையுடனும், அமைதியுடனும் வாழ வழி செய்ய வேண்டும். அவரவர் வேலையில் அவரவர் கவனம் செலுத்த வேண்டும்.
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு தாய் வயிற்று மக்கள். சகோதரர்கள். சில விஷமிகள் இவர்களைப் பிரிக்க முயல்கின்றனர். இப்படி ஏதாவது நடந்தால் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும். அதை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும். அது முக்கியம் என்று கூறினார் எடியூரப்பா.