இன்று மாலை நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாக்களுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. நீட் விலக்கு உட்பட மொத்தம் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பேசிய திமுக எம்பிகள், தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே இன்றைய தினம் மாலை ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட இருந்தது. ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று ஏற்கனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகள் அறிவித்து இருந்தன.
இதற்கிடையே சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் திடீரென சந்தித்தனர். இதையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ராஜ்பவனில் ஆளுநரைச் சந்தித்த பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு இத்தகவலைத் தெரிவித்தார். தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் நேரில் தெரிவித்துள்ளோம் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டசபை மாண்பை சீர்குளைக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மக்களை உணர்வுகளையும் மதிக்காத வகையில் செயல்பட்டு வருவதாலேயே தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அமைச்சர் கூறினார். மேலும் ஆளுநரின் தேநீர் விருந்து பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதல்வர் உள்ளிட்ட யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று ஆளுநர் ரவி தெரிவித்தார். ஏற்கனவே, திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்து இருந்த நிலையில், இப்போது திமுகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அதேபோல நிலுவையில் உள்ள நீட் விலக்கு தீர்மானத்திற்கு உடனே ஒப்புதல் தரவும் நேரில் வலியுறுத்தியதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இருப்பினும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு உறுதியையும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.