கோயம்பேடு பகுதியில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயணிகளுக்கு அமைச்சர் உறுதியளித்தார்.
எப்போது இல்லாத வகையில் இந்தாண்டு இன்று தமிழ் புத்தாண்டு, நாளை புனித வெள்ளி, 17ம் தேதி ஈஸ்டர் திருநாள் என அடுத்தடுத்த நாட்களில் பண்டிகை வருகிறது. இதனால், சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்தவகையில், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். கார், பஸ்களிலும் மக்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.
தமிழ் புத்தாண்டை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, சேலம், நாகப்பட்டினம், தஞ்சை, அரியலூர், மதுரை, நாகர்கோவில், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் தூத்துக்குடி, ஓசூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு வழக்கமான பேருந்துகளுடன் 1,200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருந்தது. விடிய விடிய மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னையில் அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம் போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம், சேலம் போக்குவரத்து கழகம், மதுரை போக்குவரத்து கழகம் என 8 போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் தடையின்றி இயக்கப்பட்டது. கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, திருவான்மியூர் பஸ் நிலையங்களில் இருந்து நேற்று மாலை முதலே பொதுமக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
பயணிகள் தாங்கள் செல்லும் பஸ்சை அறிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது. கோயம்பேடு மற்றும் ஜிஎஸ்டி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து நேற்று இரவு முதல் அதிகாலை வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 815 பேர் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு வழக்கமாக இயக்கப்பட்ட 2100 பேருந்துகள் இயக்கப்பட்டது. சிறப்பு பேருந்துகளாக கோயம்பேட்டில் இருந்து 930 பேருந்துகள் இயக்கப்பட்டது. மொத்தம் நேற்று இரவு மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 3,033 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து துறை கமிஷனர் நடராஜன் ஆகியோர் கோயம்பேடு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்ல எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிம் கேட்டறிந்தார். மேலும், பயணிகளிடம் குறைகளையும் அமைச்சர் கேட்டு நடவடிக்கை எடுத்தார்.
அதைதொடர்ந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அமைச்சருக்கு புகார் வந்தது. உடனே போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஆணையர் நடராஜன் ஆகியோர் நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை அதாவது 3 மணி நேரம் சென்னையில் இருந்து தொலைதூரம் செல்லும் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொன்றாக ஏறி பயணிகளிடம் கட்டணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயணி ஒருவர், அமைச்சர் சிவசங்கரிடம் திசையன்விளை செல்ல நான் ரூ. 3 ஆயிரம் கட்டணம் கொடுத்து வந்துள்ளேன். பிரபல பேருந்து ஆப் மூலம் நான் முன் பதிவு செய்து இருந்தேன் என்று கூறினார். வழக்கமாக ரூ.1000 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். உடனே அமைச்சர், உங்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்த அனைத்து பயணிகளிடமும் அமைச்சர் சிவசங்கர் கட்டணம் குறித்து கேட்டறிந்தார். பிறகு சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிர்வாகிகளிடம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்ப பயணிகளிடமே பெற்று கொடுத்தார். அந்த வகையில் 3 மணி நேரம் நடந்த இந்த அதிரடி சோதனையில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளிடம் கட்டணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து அமைச்சர் நேரடியாக 250 பயணிகளுக்கு கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்று கொடுத்தார்.
கூடுதல் கட்டணம் வசூலித்த பிரபல பேருந்து ஆப் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், பர்மிட் இல்லாமல் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக சென்னை வந்த ஆம்னி பேருந்து, சேலத்தில் இருந்து வந்த ஆம்னி பேருந்து, தஞ்சையில் இருந்து வந்த ஆம்னி பேருந்து என 3 பேருந்துகளுக்கு முறையான பர்மிட் இல்லாததால் பறிமுதல்செய்யப்பட்டது. அமைச்சர் நேரடியாக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் குறித்து கேட்டறிந்ததால், பல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அவர்களிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திரும்ப கொடுத்தனர்.