ஒட்டுமொத்த நாட்டையும் சூழ்ந்துள்ள வெறுப்பையும், மதவெறியையும், சகிப்புத்தன்மையின்மையையும், தடுக்காவிட்டால், கடந்த தலைமுறையினரால் மிகவும் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் அழித்து விடும்’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, ராமநவமி தினத்தில் பல மாநிலங்களில் வன்முறை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் ராம நவமி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் மாணவர்கள் இடையே மோதல் போன்ற சம்பவங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள ‘நம்மிடையே ஒரு வைரஸ் பரவி வருகிறது’ என்ற கட்டுரையில் கூறியிருப்பதாவது:
வெறுப்பு, மதவெறி, சகிப்பின்மை மற்றும் பொய் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் இன்று நாடு முழுவதும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதை நாம் தொடர அனுமதிக்கக் கூடாது. இதை நாம் இப்போது தடுக்கவில்லை என்றால், நமது சமூகத்தை சரி செய்ய முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். போலி தேசியவாதத்தின் பலிபீடத்தில் அமைதியும், பன்முகத்தன்மையும் பலியிடப்படுவதை மக்களாகிய நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த தலைமுறையினர் மிகவும் சிரமப்பட்டு கட்டியெழுப்பிய அனைத்தையும் தரைமட்டமாக்குவதற்கு முன்பு கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த பொங்கி எழும்நெருப்பை, இந்த சுனாமியை நாம் அடக்குவோம்.
இந்தியா, எப்போதும் இரு பிரிவினர் இடையே பிளவுபட்ட நாடாகத்தான் இருக்க வேண்டுமா? நாட்டு மக்கள் அத்தகைய சூழல் நமக்கு நல்லது என நம்ப வேண்டும் என்று ஆளும் அரசு தெளிவாக விரும்புகிறது. எனவே, உடை, உணவு, நம்பிக்கை, பண்டிகைகள் அல்லது மொழி என எதுவாக இருந்தாலும், அவற்றை வைத்து இந்தியர்களுக்கு எதிராக இந்தியர்களை மோத விடுகிறார்கள். முரண்பாடுகளின் சக்திகளுக்கு ஊக்கம் தரப்படுகிறது. பகைமை மற்றும் பழிவாங்கும் எண்ணங்கள் ஊக்குவிக்கப்படுகிறது. பல நூற்றாண்டாக நம் சமூகத்தை வரையத்து வளப்படுத்திய வளமான பன்முகத்தன்மை, இப்போது பிளவுபடுத்த கையாளப்படுகிறது.
நாட்டின் பிரகாசமான, புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், இளம் மனங்களை உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுத்துவதற்கும் நம் வளத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, நிகழ்காலத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் பயன்படுத்தப்படுவது ஒரு கேலிக்கூத்து. அரசியல் எதிரிகள் குறிவைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் முழு பலத்துடன் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பொய்கள் மற்றும் விஷத்தை பரப்ப மட்டுமே சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படும் போது, ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அச்சம், ஏமாற்றுதல் மற்றும் மிரட்டல் ஆகியவை ‘அதிகபட்ச ஆட்சி, குறைந்தபட்ச அரசு’ என்ற உத்தியின் தூண்களாக மாறிவிட்டன. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சோனியாவின் கட்டுரையை டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பாஜ-ஆர்எஸ்எஸ் தூண்டிவிட்ட வெறுப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் விலை கொடுக்கிறார்கள். இந்தியாவின் உண்மையான கலாச்சாரம், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் கொண்டாட்டங்களும், ஒற்றுமையான சமூகமும், வாழ்க்கையும் தான். இதை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்போம்’ எனக் கூறி உள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எதிர்க்கட்சிகள் நாட்டில் வெறுப்பு விதையை விதைத்து வருகின்றன, அதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் தொண்டர் மரணம் குறித்து பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களால் அமைதியான முறையில் ஆட்சியை நடத்த முடியவில்லை என்றார். அந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும், குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கே இருந்தார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ள அனுராக் தாக்கூர், கடந்த ஆண்டில், ராஜஸ்தானில் இதுபோன்ற 60க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றார். ஆனால், கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில காங்கிரஸ் அரசு தவறியதை சோனியா காந்தி கவனிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.