தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததால், கடந்த மூன்று நாட்களாக, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்து வருகிறார். இன்று, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது, திமுக கூட்டணி கட்சிகள், கற்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்தப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டம். இதில், விசிக, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தை போலவே இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொறுப்பை தட்டிக் கழித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத போது பொது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் போராட்டத்தை தடுக்க தவறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் மெய்காப்பாளர் டிஜிபிக்கு மயிலாடுதுறை சம்பவம் தொடர்பாக அறிக்கை அளித்துள்ளார். ஆளுநருடன் பயணித்த அவரது மெய்காப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி மயிலாடுதுறையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக டிஜிபிக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆளுநரின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வருகிறேன். ஆளுனர் ராஜ்பவனில் இருந்து வெளியே செல்லும் போதெல்லாம் அவருடன் நான் இருப்பேன். அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி ஆளுநரின் மயிலாடுதுறை பயணத்தின் போதும் நான் அவருடன் இருந்தேன்.
தருமபுரம் ஆதீனத்தின் இருபத்தி ஏழாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அழைப்பை ஏற்று ஆளுநர் அவரது ஞான ரத யாத்திரையை தொடங்கி வைத்திட சம்மதித்தார். மேலும் ஆதீன வளாகத்துக்குள் கட்டப்பட இருக்கும் புதிய கலையரங்கத்துக்கான அடிக்கல் நாட்டவும் ஆளுநர் சம்மதித்தார். இதனடிப்படையில் ஆளுநரின் சுற்றுப் பயணத் திட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
திருக்கடையூர் கோயிலிலிருந்து ஆளுநரின் கான்வாய் மயிலாடுதுறைக்கு செல்வதற்காக ஏப்ரல் 19 காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. ஆளுனர் பயணித்த காரின் முன் இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். ஆளுநர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். எங்களது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் வந்தன.
காலை 9.50 மணி அளவில் ஆளுநரின் கான்வாய் தருமபுரம் ஆதீனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் கருப்புக் கொடிகளும் ஆளுநருக்கு எதிரான கோஷங்களும் எழுப்பிய கூட்டத் திரளை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி அருகிலுள்ள மன்னம்பந்தல் பகுதியில் பார்க்க முடிந்தது. ஆளுநரின் கான்வாயை பார்த்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் காவல்துறையின் தடைகளை மீறி சாலையை நோக்கி வர தொடங்கினார்கள். கூட்டத்திலிருந்து கொடிகளும் வேறு சில பொருட்களும் கான்வாய் நோக்கி எறியப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக மேதகு ஆளுநர் மற்றும் ஆளுனரின் கான்வாய் எந்த விதமான தீங்கும் இல்லாமல் அந்த இடத்தை கடந்து சென்றது.
ஆக்ரோஷமான இந்தக் கூட்டத்தின் செயல்பாடுகள் ஆளுநர் தனது கடமைகளை செய்வதை தடுக்கும் வகையில் இருந்தது. அந்தக் கூட்டத்தின் செயல்பாடுகள் ஐபிசி 1860 பிரிவு 124 இன் படி வழக்குப் பதிவு செய்வதற்கும், மேலும் சில சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதற்கும் உரியதாகும். நடவடிக்கை கோரி இந்த அறிக்கை உங்களுக்கு தாக்கல் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.