உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மத ரீதியிலான மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் மத ரீதியிலான மோதல்கள் உத்தரப்பிரதேசத்தில் ஏற்படுவதை தடுக்க அம்மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை போலீசாருக்கு விடுமுறை கிடையாது என அந்தமாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான், அக்ஷயதிருதியை போன்ற பண்டிகைகள் வருகிற மே மாதம் 3ஆம் தேதி ஒரே நாளில் வரவுள்ளது. இதனை தொடர்ந்து அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், போலீசார், நிர்வாக அதிகாரிகளுக்கு அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை விடுமுறை ரத்து, ஏற்கனவே விடுமுறையில் உள்ளவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விடுமுறையில் உள்ள போலீசார் அடுத்த 24 மணி நேரத்தில் பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில், அனுமதி பெறாமல் எந்த மத ஊர்வலமும் செல்லக் கூடாது; மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, என, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், மத்திய பிரதேசம், டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் கலவரம் ஏற்பட்டது. ஆனால், உத்தர பிரதேசத்தில், ‘ராம நவமி விழா எந்த வன்முறையும் இன்றி, அமைதியாக கொண்டாடப்பட்டது’ என, யோகி ஆதித்யநாத் பெருமையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொருவருக்கும், தங்கள் மத வழக்கப்படி வழிபாடு செய்ய, அனைத்து உரிமைகளும் உள்ளன. ஆனால், அந்த வழிபாடு, மற்ற மதத்தினருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. அடுத்த மாதம் அக் ஷய திருதியையும், ரமலான் பண்டிகையும் ஒரே நாளில் வருகிறது. அதைத் தொடர்ந்து, வரிசையாக பல பண்டிகைகள் வருகின்றன. அதனால், போலீசார் கூடுதல் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.மாநிலத்தில் அனுமதியின்றி மத ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், மற்றவர்களுக்கு பாதிப்பை எற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. பாரம்பரியமாக நடத்தப்படும் மத ஊர்வலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
புதிதாக நடத்தப்படும் மத ஊர்வலங்களுக்கு, அனுமதி வழங்கப்பட மாட்டாது. எந்த மத வழிபாடும், அதற்கான இடங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும். சாலைகளில் போக்குவரத்தை பாதிக்கும் வகையில் வழிபாடு நடத்தவோ, ஊர்வலம் செல்லவோ அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.