கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசர அவசியமாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் படிப்படியாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சில மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கோவிட் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 30 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை சைதாபேட்டையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவிட் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியமாகும். தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. அதேபோல், தனிமனித இடைவெளிக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்தால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. டில்லி, உத்தரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த சூழலிலும் விலக்கு அளிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.