முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் கோர்ட்டில் சரண்

பணமோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில் சரண் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதுப்பாளையம் சாலையில் வசித்து வருபவர் குணசீலன் (வயது 65). ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளரான இவர் தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜாவின் உறவினர் ஆவார். இவர் 15 பேருக்கு சத்துணவு திட்டத்துறையில் வேலை கேட்டு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோரிடம் ரூ.76 லட்சம் வழங்கியதாகவும், ஆனால் அவர்கள் வேலை ஏதும் வாங்கி தரவில்லை எனவும் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மீது நம்பிக்கை மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் முறையே ரூ 12 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சத்தை கீழமை நீதி மன்றத்தில் டெபாசிட் செய்தும், ஒவ்வொருவருக்கும் 2 நபர் ஜாமீன் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் இருவரும் இன்று காலை 10.40 மணி அளவில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரெஹனா பேகம் முன்னிலையில் சரண் அடைந்தனர். அப்போது இருவரும் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்தனர்.