கேரள மாநிலத்தில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்சி ஆகியவற்றின் விலை உயர்த்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அமைப்பு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும்படி, தொடர்ந்து போராட்டம் நடத்தி மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதை அடுத்து கட்டண உயர்வை விரைவில் அமல்படுத்துவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி அளித்தார். இதை ஏற்ற போராட்டக் குழுவினர், போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் இன்று, தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆட்டோ, பேருந்து, டாக்சி உள்ளிட்டவற்றின் கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல், புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாய் ஆகவும், குறைந்தபட்ச டாக்ஸி கட்டணம் 200 ரூபாய் ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை 12 ரூபாயாக உயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.