தமிழ்நாட்டில் மின் வெட்டால் மக்கள் அவதி: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ராணிப்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் பல மணிநேரம் மின்வெட்டு நிலவுகிறது. சென்னையிலும் மின்வெட்டு உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. மின்வெட்டே இல்லை. தங்கு தடை இன்றி 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுந்கு குலைந்துள்ளது. போதை பொருள் சாதாரணமாகி விட்டது. கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை. சாதாரண குடிமகனுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு உள்ளது. கருத்து சுதந்திரம் இல்லை. எதிர்த்து பேசினால் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. 520 வாக்குறுதிகள் கொடுத்து விட்டு அவற்றை நிறைவேற்றவில்லை. இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. விவசாய கடன், கல்வி கடன் ரத்து இல்லை. கியாஸ் மானியம் கொடுக்கவில்லை. இப்படி நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் உணர்ந்து விட்டனர். தேர்தல் வந்தால் பதிலடி கொடுப்பார்கள். அடுத்த தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.