தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்: சவுமியா அன்புமணி

சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

உலக பூமி தினத்தையொட்டி சென்னையில் தூய காற்றுக்கான விழிப்புணர்வு பிரசாரம் பசுமைத்தாயகம் சார்பில் தி.நகரில் நடந்தது. பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். பிரசாரத்தை தொடங்கி வைத்து சவமியா அன்புமணி கூறியதாவது:-

நுண்ணிய மாசுத்துகள்கள் மனிதர்களின் நுரையீரலிலும் ரத்த ஒட்டத்திலும் ஆழமாக ஊடுருவி சென்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், இருதய நோய்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது.

சென்னையில் உலக சுகாதார அமைப்பு அனுமதிப்பதை விட 5 மடங்கு கூடுதலாக காற்று மாசுபட்டுள்ளது. சென்னையில் ஆண்டுக்கு 11,000 பேர் காற்று மாசுபாட்டால் மரணமடைகின்றனர். சென்னையில் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய் ஆகும்.

தனியார் வாகனங்களின் கட்டுக்கடங்காத அதிகரிப்பு, மாசுக்கட்டுப்பாடு விதிமீறல்கள், சாலைகளில் படிந்துள்ள புழுதி, பேருந்துகள் பற்றாக்குறை, நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதைகள் இல்லாமை, கட்டிடக் கழிவுகள், குப்பை எரிப்பு, பிளாஸ்டிக் மாசு, டீசல் ஜெனரேட்டர், அனல்மின் நிலைய மாசு உள்ளிட்டவை சென்னையின் காற்று மாசுபாட்டுக்கு காரணம்.

சென்னையில் காற்று மாசுபாட்டினை தடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அறிவியல் பூர்வமான தூய காற்று செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ரிமோட் சென்சார் வாகனப்புகை சோதனை முறையை கொண்டுவர வேண்டும். சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மரங்களை அதிகமாக்க வேண்டும். குப்பை எரிப்பை முற்றிலுமாக தடுக்க வேண்டும். 12 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஆணையத்தை செயலாக்க வேண்டும். ரெயில், மெட்ரோ, பேருந்து, நடைபாதை, மிதிவண்டி வசதிகள் அனைத்தும் இணைந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும். மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 8000 மாசில்லாத தூய பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..