பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடணும்: நிர்மலா சீதாராமன்

பணவீக்க உயர்வு உள்ளிட்ட சவால்களை சமாளித்து பொருளாதார வளத்தை மேம்படுத்த, ‘ஜி – 20’ நாடுகள் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜி – 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு நடந்தது. இந்தோனேஷியா தலைமையில் நடந்த இம்மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் வினியோகத்தில் இடர்பாடு, எரிசக்தி சந்தையில் அதிக ஏற்ற, இறக்கம், முதலீடுகளில் நிச்சயமற்ற சூழல் போன்றவற்றால் ஜி – 20 உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளது. எனினும், சர்வதேச கொள்கைகளைப் பின்பற்றி இடர்பாடுகளை சமாளித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திறன் ஜி – 20 அமைப்புக்கு உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியதாவது:

இந்தாண்டு இந்திய பொருளாதாரம், 8.2 சதவீதம் வளர்ச்சி காணும் என, சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. இது, சீனாவின், 4.4 சதவீத வளர்ச்சியை விட இரு மடங்கு அதிகம். சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 6.1 சதவீதத்தில் இருந்து, 3.6 சதவீதமாக குறையும். உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற்று வருவது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.