பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகள் தான் குறைக்க வேண்டும் என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல், 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேப் போல், ஒரு லிட்டர் டீசல், 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏற்கனவே பொது மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு மேலும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விளக்கமாக பேசினார். அவர் பேசுகையில், “மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மாநில அரசுகள் தான் தங்களின் வாட் வரியை 50 சதவீதம் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். குறிப்பாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் அதிக வரியை வசூல் செய்து மத்திய அரசை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம்” என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், “எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்த நிறுவனங்களை மத்திய அரசு ஒன்றும் கட்டுப்படுத்துவதில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முடக்கமும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம். நாட்டின் விலைவாசி உயர்வை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். இது கவலைக்குரிய அம்சம். ஒரு அளவுக்கு மேல் விலைவாசி உயர்வதை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.