மக்களுடன் எப்போதும் இருப்பேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களுடன் எப்போதும் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை தேர் விபத்து சம்பவம் தொடர்பான செய்தியறிந்து வேதனையுற்றதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமுற்றோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை துரிதப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மக்களுடன் எப்போதும் இருப்பேன் என தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு பின் பேட்டியளித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன் எனவும் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார் என கூறினார்.

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் உடல்நலம் கேட்டறிந்தார். தஞ்சை களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த துயரத்தை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள் என முதல்வர் குற்றம் சாட்டினார். தூற்றுவோர் பற்றி நான் கவலைப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிக்காக காசோலையை வழங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.பி. டி.ஆர்.பாலு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.