நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்படும் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை தொடங்கி உள்ளதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது.வட மாநிலங்கள் பெரும்பாலனவற்றில் மின் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் அம்மாநில மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லியில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் விவரித்தார். சத்யேந்தர் ஜெயின் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாத்ரி-2, உன் சச்சார் மின் நிலையங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான நிறுவனங்கள், மெட்ரோ ரயில்கள், மருத்துவமனைகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தற்போதைய மின் உற்பத்தியில் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை தேவை உள்ளது. தற்போதைய மின் உற்பத்தி நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த இரு மின்நிலையங்களும்தான் மெட்ரோ ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு மின் விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோல் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒருநாளைக்கு 6 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் மின்சார பற்றாக்குறை, மின்வெட்டு நிலவுகிறது.