18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போட மத்திய அரசிடம் பேசி வருகிறோம் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டை மகுவின்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 52 லட்சம் செலவில் சூரிய சக்தி உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் கட்டப்பட்டது. அதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஒரு வருடத்தில் மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. வகுப்பறைகள் அதிநவீன தரத்திற்கு மாற்றப்பட்டு உள் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்படுகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 22 மாநகராட்சி பள்ளிகள் ஹைடெக்டாக மாற்றப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அதைவிட மேலான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என முதல்-அமைச்சர் ஊக்கப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாநகராட்சி பள்ளிகளிலும் விளையாட்டு திடலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
5 வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 4 நாட்களுக்கு முன்பே தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரையில் வரவில்லை. எந்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்குவது என குழந்தைகளையும் பெற்றோர்களையும் தயார்படுத்தி வைத்துள்ளோம். இதுவரையில் செயல்படுத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அறிவிப்பு வந்த ஒரு மணி நேரத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.
18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவ மனைகளில் ரூ.382 செலுத்தி போட வேண்டும். பணம் கொடுத்து போட வேண்டும் என்பதால் பொது மக்களிடம் ஆர்வம் குறைந்தது. மற்ற தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு போட்டது போல, பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். தொடர்ந்து பேசி வருகிறோம். இலவசமாக போடச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.