வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வங்காளதேசம் மற்றும் பூட்டான் பயணம்

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர் வழங்கினார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய 2 நாடுகளுக்கும் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் வங்காளதேசத்தின் தலைநகர் தாக்காவில், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மொமென் ஆகியோரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இன்று பூட்டான் சென்ற அவர், அந்நாட்டின் பிரதமர் லியோன்சென் டோட்டேவை சந்தித்து பேசினார்.

முன்னதாக தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு ஜெய்சங்கருக்கு பூட்டான் வெளியுறவுத்துறை மந்திரி லியோன்போ தண்டி டார்ஜி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று இன்று பூட்டன் சென்ற ஜெய்சங்கருக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் உடனான சந்திப்பிற்குப் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி லியோன்போ தண்டி டார்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக பூட்டானுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 12-வது மருத்துவ உதவிப்பொருட்களின் தொகுப்பை பூட்டான் அரசிடம் ஜெய்சங்கர் வழங்கினார். கொரோனா காலத்திற்குப் பிந்தைய வளர்ச்சியில் பூட்டான் அரசுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.