சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வருகை தந்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
கடந்த அதிமுக ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் அனைத்தும், தற்போது லூலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருந்தாலும், தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது. சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிட மாட்டோம். இந்த நிறுவனத்தால் நமது சாலையோரத்தில் மளிகைக் கடை வைத்துள்ள அண்ணாச்சி, பூக்கடை வைத்துள்ள அக்கா, சிறு வியாபாரம் செய்யும் அண்ணன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே பாஜக அனுமதிக்காது.
தமிழக ஆளுநர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் உளவுத் துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர். நாகாலந்தில் கவர்னராக இருந்த அவர் கூறும் கருத்து எதுவும் தவறாக இருக்காது. குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள்.
தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றுவதற்கான வேலைகளை திமுக அரசு ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டு சட்டமன்ற பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளது. இதற்கு பாஜக எதிர்க்கும் என்பதற்காக சில திருட்டு வேலைகளை திமுக செய்து வருகிறது. அங்கே திமுக அலுவலகம் அமைப்பதற்காக இடம் வாங்கப்பட்டுள்ளது. திமுகவின் கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றம் அமைக்க முயல்கிறது. அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே புதிய சட்டமன்றம் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.