அம்மா உணவகம் மூலம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டம்: டிடிவி தினகரன் கண்டனம்

‛‛திமுகவின் சதித்திட்டத்தால் அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து சென்னை மேயர் பிரியா பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார்” என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்த நிலையில் முந்தைய ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை முடக்குவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக அம்மா உணவகத்தை மூட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‛‛அம்மா உணவகங்களை மக்கள் சரியாக பயன்படுத்துவது இல்லை. பல இடங்களில் பூட்டு கூட திறக்காத நிலை உள்ளது. இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று அவரின் ஆலோசனைப்படி செயல்படுவோம்” என்றார்.

துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், ‛‛அம்மா உணவகம் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் மக்கள் தொடர்ந்து பயன்பெறுவார்கள் என தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது. சென்னையில் ஒரு அம்மா உணவகம் மூலம் மாதந்தோறும் ஒரு லட்ச ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது” என்றார்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

திமுக சதியால் மேயர் கருத்து ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தை பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான், ‛அம்மா உணவகத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ என்று சென்னை மாநகராட்சி மேயர் பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா பெயரிலான இந்த உணவகங்களை மூட வேண்டும் என்ற காழ்ப்புணர்வோடு அவற்றில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறைப்பது, பசியோடு வாங்க வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவது போன்றவற்றை படிப்படியாக அனுப்புவது போன்றவற்றை படிப்படியாக செய்துவிட்டு தற்போது ஏழை மக்களின் மீது பழிபோட நினைக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்?. உண்மையிலேயே அம்மா உணவகங்களால் மக்களுக்கு பயனில்லை என்றால் இதேபோன்ற உணவகங்களை கருணாநிதியின் பெயரில் நடத்தப்போவதாக அமைச்சர் அறிவித்தது ஏன்?. இவர்களையெல்லாம் பின்னால் இருந்து இயக்கி கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிப்பாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.