திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஆயுதபடையில் பணிபுரிந்து வந்த சரவணகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததால் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சரவணகுமாருக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரை கொல்லும் சூதாட்டத்திற்கு அரசு உரிய தடையை கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் சரவணகுமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாகவும், அதில் பெரும் பணத்தை இழந்து லட்சக் கணக்கில் கடனாளியானதாகவும், அதிலிருந்து மீள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த 9 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு உயிரிழப்பும் மனதை கலங்கச் செய்கிறது. ஆனால், அரசோ உயிரிழப்புகளை தடுக்கத் தவறுகிறது. தமிழ்நாட்டில் இனியும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது திமுக அரசுக்கு தீராப்பழியை ஏற்படுத்தும். எனவே, இனியும் மேல்முறையீட்டை நம்பிக்கொண்டிருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் இனி அனைத்து பதிவேடுகளும் இந்தியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவும் ஒரு வகையான இந்தித் திணிப்பு தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது.
புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் ஏப்ரல் 29-ம் தேதியிட்ட சுற்றறிக்கையில், எதிர்காலத்தில் அனைத்து வகையான பதிவேடுகள், பணி புத்தகங்கள், பணி கணக்குகளின் குறிப்புகளும் முடிந்தவரை இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் அனைத்து பதிவேடுகளும் இனி இந்தியில் மட்டும் தான் எழுதப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது அப்பட்டமான இந்தித் திணிப்பு என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இந்தியைத் தவிர வேறு எந்த மொழியையும் மத்திய அரசு அலுவலகங்களில் அனுமதிக்க முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு மட்டுமின்றி, இந்திய அலுவல் மொழி சட்டத் திருத்தத்திற்கும் எதிரான செயல் ஆகும். இந்தி பேசாத மாநில மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும். இதை அரசு தவிர்க்க வேண்டும்.
‘ஜிப்மர்’ உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் இனிவரும் காலங்களில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் இப்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.